திருக்கோவிலூர் வட்டார சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் சந்தப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் (பொ) ராஜா வரவேற்றார். வேளாண் துணை இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்துப் பேசுகையில், தற்போது நிலவும் வறட்சியிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை சிறு, குறு விவசாயிகள் அனைவரும் 100 சதவீத மானியத்தில் வாங்கி பயன்பெறலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
வட்டாட்சியர் சிவசங்கரன், விவசாயிகள் சிறு, குறு விவசாயிச் சான்றை எளிதாக பெறுவதற்காக இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதில், திருக்கோவிலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, சிறு, குறு விவசாயி சான்றுக்கு விண்ணப்பித்தனர். துணை வட்டாட்சியர்கள் கண்ணன், ராமகிருஷ்ணன், வேளாண் அலுவலர்கள் சாட்டர்ஜி, சிவநேசன், மகாதேவன், மைக்கேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.