விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கவுள்ளது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரத்தில் கடந்த 9.8.2017-இல் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகள், மரக்காணம், கோட்டக்குப்பம் பேரூராட்சிகள் மற்றும் மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, காணை ஒன்றியப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, மாவட்டத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், செயல்படுத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையொட்டி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில், கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தை தேர்வு செய்வதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் அசோக் நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் டி.சுசீலா உள்ளிட்ட குழுவினர், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு பகுதியில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கத் தேவையான ஆய்வுகள் செய்வது, விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ் ஆலோசனை வழங்கிப் பேசினார்.
மாவட்டத்தின் முக்கியத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மரக்காணம் பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்தும், இந்தத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்துக்கு அனைத்துத் துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்து, விரைந்து பணியை முடிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, திண்டிவனம் உதவி ஆட்சியர் மெர்சி ரம்யா, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, கவிதா மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் முதலீட்டு நிறுவன அலுவலர்கள், முக்கியத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.