விழுப்புரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகள் ரேவதி(21). இவர், கடந்த 25.7.2012 அன்று தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, ரேவதி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுதொடர்பாக விழுப்புரம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் தென்னிலவன்(26) என்பவரை விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்து, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல், குற்றம் சாட்டப்பட்ட தென்னிலவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.