விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட நூலகத் துறை சார்பில் விழுப்புரம் அரசு மளிர் மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம்- 2022 மற்றும் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவிகளுக்கு புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் (பொ) சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வகுப்பு தொடங்கும் அனைத்து மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு, வாசிக்க வைக்கப்பட்டது.
மத்திய அரசின் நீதி ஆயோக் பரிந்துரையின்படி வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இந்திய பொது நூலக இயக்கம் ஆகியவை இணைந்து, அனைவரிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஆண்டு தோறும் ஜூன் 19-ஆம் தேதி முதல் முதல் ஜூலை18-ஆம் தேதி வரை "வாசிப்பு இயக்கம் - 2022' என்ற தேசிய அளவில் இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்த இயக்கத்தின் நோக்கம் வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் மக்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது ஆகும். விழுப்புரம் மாவட்ட நூலகங்களின் சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளையொட்டி, வாசிப்பு இயக்கம் இப்பள்ளியில் நடத்தப்பட்டது என்று மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார். வாசிப்பு இயக்கத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பபட்டன.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர்கள் பெரியசாமி, முருகன், ஆரோக்கியம், இந்திராகாந்தி , சங்கரி, வேல்முருகன், வாசகர் வட்ட துணைத் தலைவர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், எழுத்தாளர் இராமமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.