விழுப்புரம்

தண்டவாளத்தில் விரிசல்: புதுச்சேரி ரயில் தப்பியது

15th Jul 2019 01:50 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் தண்டவாளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், புதுச்சேரியிலிருந்து வந்த பயணிகள் ரயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. கண்டமங்கலம் ரயில்வே கடவுப்பாதை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பார்த்த அந்தப் பகுதி மக்கள், இதுகுறித்து அருகில் உள்ள ரயில்வே ஊழியரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்த புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் ஓட்டுநருக்கு வாக்கி டாக்கி மூலமாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து, ரயிலை நடுவழியில் நிறுத்தினர். இதனால், அந்த ரயில் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, விரிசல் ஏற்பட்டிருந்த பகுதிக்கு விரைந்த வந்த ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரயில் தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. பின்னர், குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் அந்த வழியாக இயக்கப்பட்டு, விழுப்புரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தது. 
ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் ரயிலும் தாமதமாகச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT