விழுப்புரம்

கள்ளக்குறிச்சி ஜமாபந்தி நிறைவு: 298 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

4th Jul 2019 08:46 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 298 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 கள்ளக்குறிச்சி வட்ட வருவாய்த் தீர்வாய முகாம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. வருவாய்த் தீர்வாய அலுவலரான கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கிராம வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தார். முகாமில், பொதுமக்களிடமிருந்து 2,066 மனுக்கள் வரப்பெற்றன. 774 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 442 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 850 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 வருவாய்த் தீர்வாயம் முகாம் நிறைவு நாள் விழா கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சார்-ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.
 கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பூ.தயாளன், சமூகநல பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வ.கமலம், குடிமைப்பொருள்தனி வட்டாட்சியர் க.வெங்கடேசன், ரயில்வே தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாண்டி வரவேற்றார். இதில் 137 பேருக்கு இணைய வழி பட்டா மாற்றம், 90 பேருக்கு நத்தம் பட்டா மாற்றம், 42 பேருக்கு உள்பிரிவு பட்டா மாற்றம், 6 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 16 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 7 பேருக்கு குடும்ப அட்டை என மொத்தம் 298 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 774 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக சார்-ஆட்சியர் தெரிவித்தார்.
 விழாவில் தலைமையிடத்து நில அளவர் மு.வெற்றிவேலன், வட்ட சார்-ஆய்வாளர் செந்தில் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜி.குமரன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜா, பாண்டியன், கணகபூரனி, சுகந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். மண்ட ல துணை வட்டாட்சியர் எல்.அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT