விழுப்புரம்

இரு சக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு

4th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

மரக்காணத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயியின் இரு சக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 மரக்காணம் அருகே ஆச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(56), விவசாயி. இவர், ஒருவருக்கு வழங்குவதற்காக மரக்காணத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்
 செவ்வாய்க்கிழமை காலை ரூ.1.25 லட்சம் பணத்தை எடுத்தார். அந்தப் பணத்தை இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துக்கொண்டு, மற்றொரு வங்கிக்குச் சென்றார்.
 அந்த வங்கியின் வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தான் ஏற்கெனவே வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை வைப்புத்தொகையாக செலுத்த உள்ளே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், குணசேகரனின் இரு சக்கர வாகனப் பெட்டியை கள்ளச்சாவி போட்டு திறந்து, அதில் இருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்கு புத்தகம், ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு, பெட்டியை மீண்டும் பூட்டி விட்டு தப்பினர்.
 இதனை அறியாத குணசேகரன், வங்கியிலிருந்து வெளியே வந்து, இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மரக்காணம் பூமீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். அங்கு, ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக, வாகனத்தின் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பணம் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிந்து 2 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT