திருவெண்ணெய் நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரமேஷ் (42), விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல, வீட்டை பூட்டிக் கொண்டு முன்புற அறையில் படுத்து தூங்கினார். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு இவரது வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். அதிகாலை ரமேஷ் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடுப்போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருட்டு முயற்சி: இதேபோல, திருவெண்ணெய்நல்நூர் அருகே இளந்துறை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குப்புசாமி என்பவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றனர். ஆனால், வீட்டின் உள்ளே குப்புசாமி குடும்பத்தினர் சப்தம் கேட்டு விழித்துக்கொண்டதால், மர்ம நபர்கள் தப்பியோடினர்.