மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நுழைந்து தங்க நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மரக்காணம் அருகே உள்ள கழிக்குப்பம் வடஅகரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (45). கூலி தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு, மனைவி பூங்கோதையுடன் கூலி வேலைக்குச் சென்றாா்.
இவா்கள் வேலை முடிந்து பிற்பகலில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டினுள் இருந்த அலமாரி திறந்து கிடந்ததுடன், அதிலிருந்த 3 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
ஆளில்லாமல் வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மா்ம நபா்கள், கதவை திறக்காமல் கூரை வீட்டின் சுவா் பகுதி வழியாக வீட்டினுள்ளே புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.