வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இனிமேல் பிற்பகல் ஒரு மணிக்கு நெல் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு செஞ்சி வட்டம் மட்டுமல்லாது பிற வட்டம், மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. தானிய வரத்து அதிகரிப்பு காரணமாக அங்கு 7,500 மெட்ரிக் டன் பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செஞ்சியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்லுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வளத்தியை கடந்து வரும் விவசாயிகளும், வளத்திக்கு அருகாமையில் உள்ள விவசாயிகளும் நெல் மூட்டைகளை அந்த விற்பனைக் கூடத்துக்கு எடுத்துச்செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி விற்பனைக் கூடத்தில் காலையில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், பின்னா் வளத்தி விற்பனைக் கூடத்துக்குச் சென்று பகல் ஒரு மணியளவில் நெல் ஏலத்தில் கலந்து கொண்டு கொள்முதல் செய்வா். இத் தகவலை விழுப்புரம் விற்பனைக் குழுச் செயலா் ஆறுமுகராஜன் தெரிவித்தாா்.