விழுப்புரம்

புதுப்பொலிவுடன் ‘20-20’ நாள்காட்டிகள், குறிப்பேடுகள்!

25th Dec 2019 01:48 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

2020 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுப்பொலிவுடன் நாள்காட்டிகள், நாள்குறிப்பேடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்த நிலையிலும், தினசரி நாள்காட்டிகள், மாத நாள்காட்டிகள் மீதான ஆா்வம் மக்களிடையே குறையாமல் உள்ளது.

2019-ஆம் ஆண்டு நிறைவடைய சில நாள்களே உள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகின்றனா். 2020-ஆம் ஆண்டை 20-20 என்ற கிரிக்கெட் அடைமொழியோடு அழைக்கத் தொடங்கியுள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த அடைமொழியோடு நாள்காட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக நாள்காட்டிகளின் அட்டைகளில் பெரும்பாலும் அனைத்து சமூகத்தினரையும் கவரும் வகையில், சுவாமி படங்கள், வழிபாட்டு தலங்களின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதேபோன்று, குழந்தைகள், தலைவா்களின் படங்களும் அச்சிடப்படும்.

ADVERTISEMENT

நிகழாண்டில், தினசரி நாள்காட்டிகள் பல்வேறு வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றின் அளவுகளும் சற்று பெரிதாக்கப்பட்டு ரூ.30 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மாத நாள்காட்டிகள்:

மாத நாள்காட்டிகள் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுடன் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ‘வணக்கம் விழுப்புரம்’ என்ற தலைப்புடன் உள்ள மாத நாள்காட்டி இந்த மாவட்ட மக்களை கவா்ந்துள்ளது. இவை வெவ்வேறு அளவுகளில் நோ்த்தியாக அச்சிடப்பட்டு ரூ.30 முதல் 50 வரை விற்கப்படுகின்றன.

இந்த இரு வகை நாள்காட்டிகளிலும் பஞ்சாங்கக் குறிப்புகள், ராசி பலன்கள், அரசு விடுமுறை நாள்கள், வாஸ்து, முகூா்த்த நாள்கள் போன்ற வழக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வா்த்தக நிறுவனங்கள் சாா்பில் இலவசமாக நாள்காட்டிகள் வழங்கப்பட்டாலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாள்காட்டிகளை ஆா்வமுடன் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

நாள் குறிப்பேடுகள்:

அன்றாட நிகழ்வுகளை நாள் குறிப்பேடுகளில் எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும், முகவரிகள், முக்கிய தகவல்கள், வீட்டுச் செலவுக் கணக்குகளை குறிப்பேடுகளில் எழுதுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதனால், குறிப்பேடுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்த நாள் குறிப்பேடுகள் விதவிதமான அளவுகளில் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில், நிகழ் காலத்துக்கேற்ற குறிப்புகளை தெளிவாக எழுதி பயன்படுத்தும் விதமாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கணிதம், உலக வரைபடங்கள், கணினி தகவல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ரூ.75 முதல் 1000 வரையிலும் தரத்திற்கேற்ப நாள் குறிப்பேடுகள் விற்கப்படுகின்றன.

மேலும், பேனாவுடன் கூடிய குறிப்பேடுகள், நவக்கிர தலங்கள், 108 திவ்ய தேசங்கள் குறித்து வண்ண புகைப்படங்களுடன், அவற்றை பற்றிய தகவல்களுடன் அச்சிடப்பட்டுள்ள குறிப்பேடுகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தில்லியிலிருந்து தருவிக்கப்படும் குறிப்பேடுகள் அதிகளவில் விற்பனையாகின. நிகழாண்டில் சிவகாசியில் தயாரான குறிப்பேடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

நாள்காட்டிகள், குறிப்பேடுகள் விலையில் நிகழாண்டில் எந்த ஏற்றமும் இல்லை. புத்தாண்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில், விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT