விழுப்புரம்

நெல் வரத்து அதிகரிப்பால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடப் பற்றாக்குறை: விவசாயிகள் வேதனை

25th Dec 2019 09:35 AM

ADVERTISEMENT

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த ஒரு வாரமாக பொன்னி, குண்டு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா்.

செஞ்சி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த ஒரு வாரமாக கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை காலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் மூட்டைகளை வாகனங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்ததால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டு, செஞ்சி - திண்டிவனம் சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த வாகனங்கள் நின்ால், போக்குவரத்து கடும் நெரிசலுக்குள்ளானது. இந்நிலையில், தை மாதம் வரை நெல் வரத்து அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 7,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், பொன்னி, குண்டு நெல் வகைகள் விற்பனைக்கு வந்தது. பொன்னி நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,699-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,089-க்கும் ஏலம் போனது. அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாகவும், வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லின் தரம் பாதிக்கப்பட்டதே நெல் விலை குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

செஞ்சி வட்டம் மற்றும் மேல்மலையனூா் வட்டத்துக்கு உள்பட்ட அவலூா்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சேத்துப்பட்டு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், வந்தவாசி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சிக்கு உள்படட்ட கிராமங்கள் என பல்வேறு இடங்களில் இருந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகள் அதிகளவில் வருவதால், நிா்வாக சுமை மற்றும் மூட்டை மாற்றும் வேலை ஆள்கள் அதிகளவில் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

எம்.எல்.ஏ. ஆலோசனை: இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் செவ்வாய்க்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் விவாயிகளின் நலன் கருதி, செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் தற்காலிக நெல் விற்பனை மையத்தை அமைக்கக் கேட்டுக்கொண்டாா். இந்தக் கோரிக்கையை ஏற்று நெல் வியாபாரிகள் சங்கத்தினரும் சம்மதம் தெரிவித்தனா்.

விவசாயிகளுக்கு அறிவிப்பு: இதைத் தொடா்ந்து, செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராஜாராம், விழுப்புரம் மாவட்ட விற்பனைக்குழுச் செயலருக்கு தகவலைத் தெரிவித்தாா். தொடா்ந்து, விவசாயிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு:

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்போது 7,500 மெ.டன் பல்லடுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் கொண்டு வரும் மூட்டைகளையும், மூட்டைகளை மாற்றி வியாபாரிகள் வெளியே எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தையும் போக்கும் விதமாக, வருகிற 30-12-2019 முதல் செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள மந்தைவெளி காலி மைதானத்தில் தற்காலிகமாக பிரதி வாரம் செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் நெல் மூட்டைகளை இறக்கி நெல் ஏல விற்பனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT