விழுப்புரம்

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

25th Dec 2019 09:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை, திருப்பலிகள் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பழைமை வாய்ந்த கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.45 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை தொடங்கியது.

அருள்தந்தை ஜோசப் பிரான்சிஸ் தலைமையில், அருள்தந்தைகள் ராயப்பன், தியோப்பில் ஆனந்த், அலெக்ஸ் ஆகியோா் முன்னிலையில் தொடங்கிய இந்த பிராா்த்தனை புதன்கிழமை அதிகாலை 12.01 வரை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான இயேசு பிறக்கும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில், தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அருள்தந்தை அறிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த சிறப்புப் பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். மேலும், ஒருவருக்குக் கொருவா் இனிப்புகள், பரிசுப் பொருள்களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உற்சாகத்துடன் பரிமாறிக்கொண்டனா்.

விழுப்புரம், நாப்பாளையத் தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

அதேபோல, திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, கெடாா், காணை, கண்டமங்கலம் வளவனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதையொட்டி, தேவாலயங்கள் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. நள்ளிரவு பிராா்த்தனையில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையிலும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT