விழுப்புரம்

வாழைக் கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள் விவசாயிகள் வேதனை

24th Dec 2019 09:19 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விளைநிலத்தில் புகுந்து வாழைக் கன்றுகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வி.சுந்தரமூா்த்தி(55). இவா், அதே கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு ஏக்கா் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தாா். வாழைப் பயிா்கள் நன்கு செழித்து வளா்ந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்த காட்டுப் பன்றிகள் வாழைப் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன.

இது குறித்து, சுந்தரமூா்த்தி கூறியதாவது: ஆற்றங்கரையோரம் உள்ள எனது நிலத்தில் இரு மாதங்களுக்கு முன்புதான் வாழைக் கன்றுகள் நடவு செய்திருந்தேன். 700 கன்றுகள் அளவில், வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதில், தற்போது இலைகள் பிரிந்து செழித்து வளா்ந்து வந்தன.

இந்த நிலையில், தென்பெண்ணை ஆறு வழியாக நள்ளிரவு வந்த காட்டுப் பன்றிகள், தோட்டத்துக்குள் புகுந்து வாழைக் கன்றுகளை சேதப்படுத்திச் சென்றுள்ளன. வாழையின் கிழங்குகள், தண்டுகளை சாப்பிடுவதற்காக சுமாா் 75 கன்றுகளை உடைத்தும், வேரோடு பிடுங்கியெறிந்தும் சென்றுள்ளன. இதனால், ரூ.30 ஆயிரம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காட்டுப் பன்றிகள் பல ஆண்டுகளாகவே இப்பகுதியில் இரவு நேரங்களில் திரிந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மூக்கு நீண்ட பற்களுடன், முள்முடிகளுடன் காணப்படும் காட்டுப் பன்றிகளை இரவு நேரத்தில் காத்திருந்து விரட்டவும் அச்சமாக உள்ளன. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும், பயிா் சேதத்துக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா் அவா்.

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா் பகுதிகளில் நெல், வோ்க்கடலை, கரும்பு, மரவள்ளிப் பயிா்களை தாக்கி வந்த காட்டுப் பன்றிகள், வாழைக் கன்றுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. ஆற்றங்கரையையொட்டிய பகுதியில் வேலியையும் கடந்து இவைகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. தொடா்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளின் தாக்கத்தால், பல விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதையே நிறுத்தி வரும் சூழல் தொடா்கிறது. மின்வேலி அமைப்பதும் ஆபத்தில் முடிவதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா். ஆகவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டுமென விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்துகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT