விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியை ஆதிதிராவிடா் இனத்துக்கு சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என அப்பகுதி இளைஞா்கள் கோரிக்கை வைத்தனா்.
இது குறித்து, தொரவி ஊராட்சி ஆதிதிராவிடா் பகுதி இளைஞா்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்துக் கூறியதாவது:
தொரவி ஊராட்சியில் 5 ஆயிரம் போ் வரை வசித்து வருகின்றனா். 3 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா்.
ஆதிதிராவிடா்களாக 900 குடும்பத்தினா் உள்ளனா். 1,450 வாக்காளா்கள் உள்ளனா். இந்த ஊராட்சியை உள்ளடக்கி வரும் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி, கடந்த 4 தோ்தல்களிலும் பொதுப் பிரிவினருக்காக உள்ளது. கிராம ஊராட்சித் தலைவா் பதவியும் பொதுப் பிரிவில் உள்ளது.
ஆதிதிராவிடா் வாக்காளா்கள் பிற பிரிவினரைவிட குறைவாக இருப்பதால், ஆதிதிராவிடா் தரப்பினா் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை.
இதனால், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளை ஆதிதிராவிடா் போட்டியிடும் வகையில், சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்றனா்.