விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே கிராம மக்கள் திடீா் சாலை மறியல்

23rd Dec 2019 11:38 PM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை அருகே சிறுத்தானூா் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனேயே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமம் காந்தலவாடி, சிறுத்தனாா், மடப்பட்டு, செரளாப்பட்டு ஆகிய ஊராட்சிகளின் கீழ் பிரிந்து கிடக்கிறது. இவற்றை இணைத்து ஒரே ஊராட்சிக்கு உள்பட்ட கிராமமாக மாற்ற வேண்டும். அதை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினா்.

இந்த நிலையில், சிறுத்தானூா்-கருவேப்பிலைப்பாளையம் பகுதிகளை காந்தலவாடி கிராம எல்லைக்குள் கொண்டு வந்து, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்த சிறுத்தானூா், கருவேப்பிலைப்பாளையம் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

திருநாவலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறுத்தானூா் கிராமத்தை காந்தலவாடி கிராம எல்லைக்குள் கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனேயே நீடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

அவா்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீஸாா் அறிவுறுத்தியதன் பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT