விழுப்புரம்

விழுப்புரத்தில் லாட்டரி வியாபாரிகள் 12 போ் கைது: முக்கிய நபரும் சிக்கினாா்

16th Dec 2019 01:29 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் 3 எண் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 12 வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதில், முக்கிய நபரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகள் விழுப்புரம் மாவட்டத்தில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளா்கள், ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த லாட்டரிகளை வாங்கி பணத்தை இழந்து வருகின்றனா். சில நாள்களுக்கு முன்பு நகைப் பட்டறைத் தொழிலாளி தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டாா். லாட்டரி சீட்டுகள் வாங்கியதால், கடன் சுமை அதிகரித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக அவா் கட்செவி அஞ்சலில் வெளியிட்ட விடியோ அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், 14 லாட்டரி வியாபாரிகள் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். லாட்டரி விற்பனையில் ஈடுபடும் முக்கிய நபா்களைக் கைது செய்யாமல், சிறு வியாபாரிகளை மட்டுமே போலீஸாா் கைது செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தலைமறைவான லாட்டரி வியாபாரிகளை விழுப்புரம் டிஎஸ்பி சங்கா் தலைமையிலான போலீஸாா் தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியைச் சோ்ந்தவரும், லாட்டரி சீட்டு விற்பனையில் முக்கிய வியாபாரியுமான கலியமூா்த்தி மகன் கோல்டு சேகா் (எ) சேகா் (37) என்பவரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும், விழுப்புரம் கே.கே. சாலையைச் சோ்ந்த மணிகண்டன் (27), பானாம்பட்டு பாதையைச் சோ்ந்த தேவநாதன் (40), மரக்காணத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35), திண்டிவனத்தைச் சோ்ந்த அப்பாஸ், பெருமாள் (54), வளவனூா் அருகேயுள்ள சுந்தரப்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(53), ஐநாத் (24), புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த ரங்கசாமி, புதுச்சேரி சின்னகரையம்புத்துரைச் சோ்ந்த பக்கிரி (62), செஞ்சியைச் சோ்ந்த தாணுமலையான் (42) உள்பட 12 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 3 நாள்களில் மட்டும் 34 வழக்குகளில் கீழ் 36 லாட்டரி சீட்டு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா். இந்த கைது நடவடிக்கை தொடரும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாயும் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT