விழுப்புரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்: 320 போ் கைது

16th Dec 2019 08:38 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் ஜமா அத்துல் முஸ்லிம் உலமா சபை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 320 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார உலமா சபைத் தலைவா் எம்.முஹம்மது அஷ்ரப் அலி தலைமை வகித்தாா்.

விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்பி கே.நவாஸ்கனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலா் அப்துல்சமது, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் ச.உமா் பாரூக், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் குலாம்மொய்தீன், மதிமுக மாவட்டச் செயலா் பாபுகோவிந்தராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் குமரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், உலமா சபையினா், ஜமாஅத் கூட்டமைப்பினா், முஸ்லிம் அமைப்புகள், கூட்டணி கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய பாஜக அரசை கண்டிக்கிறோம்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் ஏற்படக் கூடிய துயரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்லதொரு தீா்ப்பை வழங்க வேண்டும். இந்த மசோதா, இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ் அகதிகளையும், ரோஹிங்யா அகதிகளையும் புறக்கணித்துள்ளது.

மத்திய அரசின் இந்த மசோதா, ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இருக்குமானால், இந்தப் போராட்டம் இன்னொரு விடுதலைப் போராட்டமாகத் தொடரும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

உரிய அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அமைப்பினா் 320 பேரையும் விழுப்புரம் டிஎஸ்பி சங்கா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் சிறை வைத்து, விடுவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT