விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான திட்டத் தோ்வை 8,694 மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் எழுதினா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான திட்டத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 30 மையங்களில் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு மொத்தம் 8,962 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 8,694 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 268 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
விழுப்புரத்தில் காமராஜா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை எம்ஆா்ஐசிஆா்சி பள்ளி, வளவனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் பிலோமினாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூா் கபிலா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகதுருகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, உளுந்தூா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 30 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
திண்டிவனம், விழுப்புரத்தில் நடைபெற்ற தோ்வுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.