விழுப்புரம்

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்!

30th Aug 2019 10:08 AM

ADVERTISEMENT

 

திண்டிவனம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று, பெண் குழந்தை பிறந்தது.

திண்டிவனம் அருகே உள்ள கீழ்ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி விமலா (21). இவர், நிறைமாத கர்ப்பிணியாக தாய் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில், விமலாவுக்கு வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. உடனிருந்த அவரது தாய் செல்விக்கு (பார்வை குறைபாடு உடையவர்) என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். சற்று நேரத்தில், கீழ்ஆதனூருக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் விமலா ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

ADVERTISEMENT

எனினும், திண்டிவனத்தைக் கடந்தபோது, விமலாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திகேயன் வாகனத்தை மெதுவாக இயக்கினார். அதே நேரத்தில் உள்ளே இருந்த மருத்துவ உதவியாளர் சந்தோஷ், விமலாவுக்கு பிரசவம் பார்த்தார்.

சிறிது நேரத்தில் விமலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும், சேயும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களை அனைவரும் பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT