திண்டிவனத்தில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் வரையில் மோசடி செய்ததாக போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டிவனம் வேப்பஞ்சாலை தெருவைச் சேர்ந்த அன்பையா மகன் டேனியல் சித்தர் (58). திருநெல்வேலியை அடுத்த
மூன்றடைப்பைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக திண்டிவனத்தில் வசித்து வருகிறார்.
டேனியல் சித்தர் மாந்திரீகம் செய்வது, பில்லி சூனியம், வசியம் செய்வது என்று அப்பாவி மக்களை ஏமாற்றி, பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விழுப்புரத்தை அடுத்த நன்னாடு அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான முருகையனின் (59) இரண்டாது மகள் உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இவரைக் குணப்படுத்த சாமியார் டேனியல் சித்தரை அணுகலாம் என்று முருகையனின் மூத்த மருமகன் நாகப்பன் தெரிவித்துள்ளார். இதன்பிறகு, முருகையன் டேனியல் சித்தரிடம் சென்று மகளை குணப்படுத்துமாறு கேட்டுள்ளார்.
அதற்கு, பூஜைகள் செய்தால், உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறி சாமியார் பணம் பறித்தாராம்.
மேலும், முருகையன் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க பூஜைகள் செய்வதற்காக பணம் வேண்டும் என்றும் டேனியல் சித்தர் பணம் பறித்து வந்தாராம்.
இப்படியே ரூ.12 லட்சம் வரையில் சாமியர் மோசடி செய்ததையடுத்து, ஏமாற்றம் அடைந்த முருகையன் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், அவரது மருமகன் நாகப்பன் ரோசணை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில், திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி, போலி சாமியார் டேனியல் சித்தரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, ரோசணை போலீஸார், டேனியல் சித்தர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.