விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே வனத் துறையைக் கண்டித்து சாலை மறியல்

29th Aug 2019 09:19 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே சாலைப் பணியை வனத் துறையினர் தடுத்து வருவதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து 20 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சிறுநாகலூர் முதல் நின்னையூர் கூட்டுச் சாலை வரை, நீண்ட காலமாக சேதமடைந்து குண்டும், குழியுமாகக் கிடக்கும் சாலையை,  நபார்டு நிதி உதவித் திட்டத்தின் மூலம் சீரமைப்பதற்கான பணி அண்மையில் நடைபெற்றது.
இந்த சாலையின் நடுவே 400 மீட்டர் தொலைவு வனத் துறைக்கு உள்பட்ட பகுதிக்குள் வருவதால், அங்கு சீரமைப்புப் பணியை மேற்கொள்ள விடாமல் அந்தத் துறையினர் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மையப்பகுதியான கூத்தக்குடி செல்ல முடியாமல் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். 
எனவே, அந்த 400 மீட்டர் தொலைவுக்கும், இதே போல, வாணியந்தாங்கல் முதல் கூத்தக்குடி வரையான சாலையின் நடுவே உள்ள 200 மீட்டர் தொலைவுக்கும் சீரமைப்புப் பணி மேற்கொள்ள வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும், இதற்கான அனுமதியைப் பெற வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து, இருபது கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என 400-க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை மறியல் போராட்டம் நடத்தத் திரண்டனர்.
போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டச் செயலர் பி.மணி தலைமை வகித்தார். 
மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், பி.சுப்பிரமணியன், ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் அ.பா.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ராமநாதன், பாலச்சந்தர் ஆகியோர் தலைமையிலான உளுந்தூர்பேட்டை,  கள்ளக்குறிச்சி பகுதி போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு ஊர்வலமாக வந்தவர்களை பேரிகார்டு அமைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வேல்முருகன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வனத் துறை அதிகாரிகளிடம் பேசி இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. 
இதனால், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வன அலுவலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டுச் சென்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT