விழுப்புரத்தில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் திரிந்த ஆமையை வனத் துறையினர் மீட்டனர்.
விழுப்புரத்தில் சென்னை சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை காலை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜே.கீதா அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் வனத் துறை வனக் காப்பாளர்கள் ராஜாராம், கோவிந்தன் ஆகியோர் விரைந்து வந்து ஆமையை மீட்டனர். அந்த ஆமை கண்டாச்சிபுரம் அருகே அடுக்கம் வனப் பகுதியில் விடுவிப்பதற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறியதாவது: இந்த ஆமை, பால் ஆமை இனத்தைச் சார்ந்தது. இவை கிணறுகளிலும், ஓடை நீரிலும், நிலப்பகுதியிலும் வாழ்கின்றன. தற்போது, மழைக் காலம் தொடங்கியதால், இந்த ஆமை நீர் நிலையிலிருந்து வெளியே வந்திருக்கலாம். வேட்டை ஆட தடை விதிக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இந்த ஆமைகள் இடம்பெற்றுள்ளதால், யாரேனும் அவற்றை தாக்கி உயிரிழக்கச் செய்தால், வனத் துறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.