உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை இரவு இரு வீடுகளின் கதவை உடைத்து 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய் நல்லூரை அடுத்த டி.மழவராயனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சுகுமார்(45), விவசாயி. இவர், திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டின் வராண்டாவில் படுத்துத் தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடிக் கொண்டு தப்பினர். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சம். இதே போல, திங்கள்கிழமை நள்ளிரவு சுகுமார் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் தண்டபாணி (50) என்பவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் திருட்டு நடந்த வீடுகளுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.