விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம் அருகேயுள்ள பரிகம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி அசோதை (50), கூலித் தொழிலாளி. திங்கள்கிழமை காலை, கோரிக்கை மனுவுடன் வந்த இவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வாயில் பகுதியில் வந்தபோது திடீரென வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. உடனே அங்கிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொண்டு வந்த மனுவை வாங்கி, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:
பரிகம் கிராமத்தில் அசோதை வசிக்கும் வீட்டை அவரது மகளான பாபுராம் மனைவி செந்தமிழ்ச்செல்வி, பேரன் விக்னேஷ் ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டு, அவரைத் தாக்கி வெளியே அனுப்பியுள்ளனர். கச்சிராயப்பாளையம் போலீஸில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்த அசோதை, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கொண்டு வந்த மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.