விழுப்புரம்

விநாயகர் சிலை வழிபாட்டுக்கு காவல் துறை கட்டுப்பாடு

27th Aug 2019 10:27 AM

ADVERTISEMENT

சதுர்த்தியையொட்டி, 10 அடி உயரத்துக்கு மேல் விநாயகர் சிலை வைத்து வழிபடக் கூடாது என்று விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால் தெரிவித்தார்.
 விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவுள்ள குழுவினர், அமைப்பினருடனான காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம்  விழுப்புரம் காவலர் மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் விழுப்புரம் தாலுகா, நகரம், மேற்கு, வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, பெரியதச்சூர் காவல் எல்லை வரம்புக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலை வழிபாட்டுக் குழுவினர், அமைப்புகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால் பேசியதாவது: 
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட வேண்டும் என்றால், வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். 
மேலும், அந்த இடத்தில் வைப்பதற்கு இடத்தின் உரிமையாளர், காவல் துறை, தீயணைப்புத் துறையிடம்  தடையில்லாச் சான்று, மின் துறையிடம் மின் இணைப்பு ஆகியவை பெற வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய கூரைகளின் கீழ் சிலைகளை வைக்கக்கூடாது. சிலை வைப்பது முதல் கரைப்பது வரை விழா குழுவினர் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் 24 மணி நேரம் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் பகுதியில் 350 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நிகழாண்டு, கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களை தவிர்த்து புதிய இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதிக்கப்படாது. 
சிலைகளை கரைக்க புதிய பாதைகளில் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படாது. சிலை கரைக்கும் நாளில் யாரும் மது அருந்தக் கூடாது. சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து, 10 அடி உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்க முடியும். சிலை வழிபாட்டுக் குழுவினர், அமைப்பினர் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
 தாலுகா காவல் ஆய்வாளர் கணகேஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் ராபின்சன், வளவனூர் காவல் ஆய்வாளர் நந்தகோபால், கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT