விழுப்புரம்

சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற ஆட்சியரிடம் க.பொன்முடி கோரிக்கை

27th Aug 2019 10:27 AM

ADVERTISEMENT

விக்கிரவாண்டி தொகுதியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பொது மக்களுடன் திரண்டு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். 
திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்எல்ஏ, விக்கிரவாண்டி கடையம் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களுடன்,  திங்கள் கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி கூறியதாவது: 
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காணை வடக்கு ஒன்றியத்தில், கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, தற்போது சேதமடைந்துள்ள  நல்லாப்பாளையம் முதல் கடையம் வரையிலான கிராமச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும். திருக்கோவிலூர் தொகுதிக்கு உள்பட்ட அருங்குறுக்கை,  தண்டரை ஆகிய  ஊராட்சிகளில் வனத் துறைக்குச் சொந்தமான பகுதிகளில்,  கிடப்பில் உள்ள சாலைத் திட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும். 
விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு கிராமங்களில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை விரைந்து போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோருக்கு அதற்கான ஆணை வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், கடையம், தண்டரை ஆகிய சாலைப் பணிகளை செயல்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக,  வனத் துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளதால்,  சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.  
முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கு,  ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தான் மீண்டும் வருகின்றனர்.  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  மேலும்,  5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்று, அண்மையில் முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, விண்ணப்பிப்பவர்களுக்கு ஆணை வழங்க வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார். இதையடுத்து, மாவட்ட வனத் துறை அலுவலரையும் க.பொன்முடி நேரில் சந்தித்து மனு அளித்தார்.
 திமுக மாவட்டப் பொருளர் நா.புகழேந்தி,  மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ஜனகராஜ்,  ஒன்றியச் செயலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT