காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்று, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ள சட்ட உரிமைகள் குழுவினருக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, சட்ட உரிமைகள் குழுவின் பொதுச் செயலர் ராஜலட்சுமி மந்தா தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வாகன பயணம் மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடந்த 15-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இந்தக் குழுவைச் சேர்ந்த 21 பேர், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு வேனில் பிரசார பயணத்தை தொடர்ந்தனர்.
திண்டுக்கல், திருச்சி வழியாக விழுப்புரத்துக்கு சனிக்கிழமை மாலை இந்தக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது, ராஜலட்சுமி மந்தா தலைமையிலான குழுவினர் கூறியதாவது: பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான நல்ல செயல் திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, பிற மாநிலங்களைப் போல மாற்றியுள்ளதால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதை வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில், 13 மாநிலங்கள் வழியாக, 5,200 கி.மீ. தொலைவு பயணம் செய்து, 20 நாள்களில் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்குச் செல்லவுள்ளோம். பயணத்தின் இடையே சட்டங்கள், தனி மனித ஒழுக்கம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்லவுள்ளோம் என்றனர்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு தங்கும் இவர்கள், ஞாயிற்றுக்கிழமை புதுவை வழியாக பயணத்தை தொடர்கின்றனர்.