விழுப்புரம்

கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலி: 4 பேர் காயம்

16th Aug 2019 09:26 AM

ADVERTISEMENT

செஞ்சி அருகே புதன்கிழமை இரவு கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரியை அடுத்த கணகசத்திரத்தைச் சேர்ந்த ராமன் மகன் மோகன் (26). வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.
இவர், வெங்காயம் வாங்குவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் புதன்கிழமை இரவு கனகசத்திரத்தில் இருந்து கடலூருக்கு சென்றுகொண்டிருந்தார்.
செஞ்சி அருகே வணக்கம்பாடியில் இவர்களது கார் வந்த போது, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
அப்போது, கிணற்றின் கரையில் இருந்த வேப்ப மரக்கிளையில் கார் சிக்கி தொங்கியது. இதில், ஓட்டுநரைத் தவிர மற்ற மூவரும் கிணற்றில் விழுந்தனர்.
அப்போது, தண்ணீரில் மூழ்கி மோகன் நிகழ்விடத்திலேயே இறந்தார். மேலும், காரில் பயணம் செய்த வெங்கடேசன் (38), ஆறுமுகம் (36) ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். 
எனினும், இவர்களுக்கு நீச்சல் தெரிந்ததால் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். ஓட்டுநர் முத்துக்குமாரும் (23) காயமடைந்தார். காயமடைந்த மூவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விபத்து குறித்து கார் ஓட்டுநர் முத்துக்குமார் மீது வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT