விழுப்புரம்

நெகிழிப் பை இல்லை எனக் கூறிய உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 2 இளைஞர்கள் கைது

11th Aug 2019 03:20 AM

ADVERTISEMENT


சின்னசேலம் அருகே உணவகத்தில் நெகிழிப் பை இல்லை என்று கூறிய உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் மோகன் மகன் ஜெயரதன் (38). இவர், கனியாமூர் நான்குமுனை சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.
இவரது உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் சின்னசேலத்தை அடுத்த கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சுதாகர்,  அவரது நண்பர்கள் இருவருடன் சென்றாராம். கடையின் உரிமையாளரிடம் புரோட்டா கட்டித் தருமாறு கேட்டனராம். ஜெயரதனும் புரோட்டாவைக் கட்டிக் கொடுத்துள்ளார். அதை எடுத்துச் செல்ல நெகிழிப் பை கேட்டனராம். அதற்கு ஜெயரதன் நாங்கள் நெகிழிப் பைகளை பயன்படுத்துவதில்லை எனக் கூறினாராம்.
இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, உணவகத்தின் உரிமையாளர் ஜெயரதனை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இரவு சுமார் 8 மணிக்கு சுதாகர், அவரது கிராமத்தைச் சேர்ந்த 10 மேற்பட்டோரை அழைத்து வந்து மீண்டும், ஜெயரதனை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கினராம்.
இதில், ஜெயராஜ், வெங்கடேசன்,ஜெயகுமார் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ஜெயரதன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடத்தூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஏழுமலை (19), அமுல் மகன் பிரகாஷ் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான கடத்தூரைச் சேர்ந்த ராமதாஸ் மகன்கள் சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன் மகன் நாகரத்தினம், ராமதாஸ் மகன் இளையராஜா, சின்ராசு மகன் பாண்டியன், ராஜேந்திரன் மகன் பாரதி, பொடையன் மகன் ராஜேந்திரன், ராஜேந்திரன் மகன் அருள் உள்ளிட்ட 8 பேரைத் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT