விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மது கடத்தலை தடுக்கச் சென்றபோது, கார் மோதியதில் சோதனைச் சாவடி போலீஸ் காவலர் காயமடைந்தார்.
புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையில் வசிப்பவர் செல்வம் (29). விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிகிறார். இவர் புதுவை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தபோது, புதுவையிலிருந்து வந்த ஆம்னி வேன் ஒன்றை சந்தேகப்பட்டு நிறுத்தினார். அந்த வேன் நிற்காமல் சென்றதால், செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றதாகத் தெரிகிறது.
அந்த வேன், புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் பயணித்து, கிளியனூர் அருகே கேனிப்பட்டு பகுதி வழியாக வேகமாகச் சென்றது. அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த காவலர் செல்வத்தின் மீது சீர்காழியிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற காவல் ஆய்வாளர் சதீஷ் என்பவரின் கார், எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் செல்வத்தின் கால் முறிந்தது. உடனே காரை நிறுத்திய ஆய்வாளர் சதீஷ், கிளியனூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனே செல்வத்தை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து, கிளியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.