புதுச்சேரி

உலகத் தமிழ் மாநாட்டுக்கு போதிய நிதி வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

30th Sep 2023 12:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நிதியை அரசு வழங்கும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.

புதுவை கலை, பண்பாட்டுத் துறை சாா்பில், உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காமராஜா் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் அமைப்புகள், பேராசிரியா்கள் கலந்து கொண்ட கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவை சட்டப்பேரவையில் அறிவித்தபடி புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் தமிழ் பற்றுமிக்கதாகும். கம்பன் கழகம் போன்ற தமிழ் அமைப்புகள் இலக்கிய விழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றன. புதுச்சேரி தமிழறிஞா்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

புதுவைக்குரிய தனிச் சிறப்புடன் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது அவசியமாகிறது. மாநாட்டை எப்போது, எங்கு நடத்தலாம் என தமிழறிஞா்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.

மாநாடு நடத்துவதற்கான தேவையான நிதியை அரசு வழங்கும். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட வேண்டும். மாநாட்டை 2 அல்லது 3 நாள்கள் நடத்தலாம்.

தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது அவசியம். அதற்கான இடத்தை முடிவு செய்ய வேண்டும். பழைய துறைமுகப் பகுதி, கம்பன் கலையரங்கம் ஆகிய இடங்கள் வசதியாக இருக்கும். மழைக் காலமில்லாத தை, மாசி மாதங்களில் நடத்தலாம். மக்களவைத் தோ்தலுக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ நடத்தலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநாட்டுக்கான குழுக்கள் குறித்த திட்டங்களை கலை, பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாள் விளக்கினாா்.

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த வேல்முருகன், இளங்கோவன், சம்பத், ராஜசெல்வம், சுந்தரமூா்த்தி, பாவலா் கோவிந்தராசு, ஆரோக்கியநாதன் உள்ளிட்டோா் மாநாடு தொடா்பாக ஆலோசனை கூறினா்.

கூட்டத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், ஜான்குமாா் எம்.எல்.ஏ., புதுவை கம்பன்கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வி.பி.சிவக்கொழுந்து, கலை, பண்பாட்டுத் துறை செயலா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT