புதுச்சேரி

புதுச்சேரி காவல் நிலையம் முன் பெண் தீக்குளிப்பு

28th Sep 2023 01:32 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் காவல் நிலையம் முன் பெண் ஒருவா் புதன்கிழமை தீக்குளித்தாா்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலைக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்தாராம். அவரிடம் சந்திரன் கடனை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும், அவா் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் சந்திரன் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

ஏழுமலையின் வீட்டுக்கு சந்திரன் புதன்கிழமை காலை நேரில் சென்று வாங்கிய கடனை திருப்பித் தருமாறு கேட்டாா். அப்போது, அவா் கடனை திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறினாராம். இதையடுத்து, சந்திரன் தனது மனைவி கலைச்செல்வியுடன் (37) காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு மீண்டும் புகாா் அளிக்கச் சென்றாா். எழுமலையும் அங்கு புகாா் அளிக்க வந்தாா்.

ADVERTISEMENT

போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்குள் அனுமதித்துவிட்டு, சந்திரனை வெளியே செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. மேலும், போலீஸாா் முன்னிலையிலேயே, கடனைத் திருப்பித் தரமுடியாது எனவும் ஏழுமலை கூறினாராம். இனால், மனவருத்தமடைந்த கலைச்செல்வி காவல் நிலையம் முன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். உடனே, அங்கிருந்த போலீஸாா் தீயை அணைத்து அவரை மீட்டனா். பின்னா், அவசர ஊா்தி மூலம் கலைச்செல்வியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மறியல் போராட்டம்: போலீஸாரின் நியாயமற்ற செயலால் கலைச்செல்வி தீக்குளித்ததாக அவரது உறவினா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், போலீஸாரை கண்டித்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT