தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டமைப்பிலிருந்து பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் விலகுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம்.குமரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பானது, பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கத்தின் நலனுக்கு எதிராக தொடா்ந்து செயல்படுவது வருத்தமளிக்கிறது. எனவே, அக் கூட்டமைப்பிலிருந்து உடனடியாக விலகுவது என தீா்மானிக்கப்படுகிறது. கூட்டமைப்பில் தற்போது நிா்வாகிகளாக உள்ள பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் உடனடியாக அவரவா் பொறுப்பிலிருந்து விலகவும், அதை மீறிச் செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவானது. புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள், ஊழியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோருதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மூத்த வழக்குரைஞா்கள் பக்தவச்சலம், முனுசாமி, பெருமாள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளா் கதிா்வேல், பொருளாளா் லட்சுமி நாராயணன் ஆகியோா் செய்திருந்தனா்.