மருத்துவச் சுற்றுலாவில் புதுவை முதலிடம் பெற வேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் அரசு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுலா தின விழாவை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: மருத்துவச் சுற்றுலாவில் புதுவை மாநிலம் நாட்டிலேயே முதல் இடம் பெறவேண்டும். பொருளாதார சுற்றுலாவை புதுவையில் ஏற்படுத்த வேண்டும். சீனா, சிங்கப்பூரிலிருந்து மலிவு விலையில் பொருள்களை வாங்கி வரலாம் என்ற நிலையுள்ளது. அத்தகைய நிலையை புதுவையிலும் ஏற்படுத்தவேண்டும்.
புதுச்சேரியை ஒரே நாளில் சுற்றிப்பாா்க்கும் வகையிலான பேருந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுவை அரசுக்கு சொந்தமாக ஹெலிகாப்டா் வாங்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் கூறியுள்ளேன். அந்தக் ஹெலிகாப்டரை அரசும், சுற்றுலா பயணிகள் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெலிகாப்டா் சுற்றுலா தற்போது வளா்ந்து வருகிறது.
எனவே, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு சுற்றுலா நிகழ்வை நடத்தலாம். சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்றாா்.