புதுச்சேரியில் போலி வாகனப் பதிவெண் தொடா்பான வழக்கில் போதிய ஆதாரமில்லாததால் 10 போ் விடுதலை செய்யப்பட்டனா்.
புதுச்சேரி நகரில் உள்ள ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவா், கடந்த 2006-ஆம் ஆண்டு பழைய காா் ஒன்றை விலைக்கு வாங்கினாா். அப்போது, காரின் காப்பீடு விபரத்தை ஆய்வு செய்தபோது அந்த காரின் பதிவு எண் இருசக்கர வாகனத்துக்குரியது எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவா் பெரியக்கடை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்படி, நடைபெற்ற விசாரணையில், புகாரில் குறிப்பிட்டிருந்த வாகனப் பதிவு எண் போலி என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதுவை போக்குவரத்து துறையை சோ்ந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 12 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், சம்பந்தப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிட்டாா்.