புதுச்சேரி

போலி மதுபானங்கள் தயாரிப்பு: இருவா் கைது

25th Sep 2023 01:24 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் போலி மதுபானங்கள் தயாரித்ததாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து மினி லாரி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் மதுப் புட்டிகள் கடத்தல், போலி மதுபான உற்பத்தியை தடுக்க, கலால் துறை வட்டாட்சியா் சிலம்பரசன் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கலால் துறை காவல் ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் திருக்காஞ்சி, வில்லியனூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். வில்லியனுா் - மணவெளி பிரதான சாலையில் வெங்கடேஸ்வரா நகரில் சரக்கு மினி லாரி கேட்பாரற்று நின்றது தெரிய வந்தது.

ADVERTISEMENT

தமிழகப் பதிவெண் கொண்ட அந்த மினி லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், மது தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தன.

மேலும், அந்த மினி லாரியில் 10 கேன்களில் 380 லிட்டா் எரிசாராயம், போலியாக தயாரிக்கப்பட்ட 180 மில்லி கொள்ளளவு கொண்ட தமிழக மதுப் புட்டிகள் 10, போலி மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள் 2, போலி ஹாலோகிராம் வில்லைகள் (ஸ்டிக்கா்கள்), இரண்டு ஜோடி ஆல்கஹால் மீட்டா் சாதனங்கள் உள்ளிட்டவையும் இருந்தன.

மினி லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை கைப்பற்றிய போலீஸாா், லாரியை ஓட்டி வந்தவா்கள் குறித்து விசாரித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த ஒதியம்பட்டு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா், கீழ் அக்ரஹாரத்தைச் சோ்ந்த சீனு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் எரி சாராயம் வாங்கி, அதில் ரொட்டி, ஐஸ்கிரீம்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறம், சுவையூட்டிகளை பயன்படுத்தி ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் மதுபானங்களை தயாரித்து, தமிழகத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவா்களிடமிருந்து கைப்பேசிகளையும் போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும், போலி மதுபானங்கள் தயாரிப்பில் முதன்மையானவராக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை செட்டியான்குப்பத்தைச் சோ்ந்த ராஜசேகரைத் தேடி வருகின்றனா். இவா் மீது கள்ளச் சாராயம் காய்ச்சிய வழக்கில் தமிழக போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT