புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடனுதவிக்கான அனுமதிக் கடிதம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சாா்பில் ‘பஸ்தி சம்பா்க் அபியான்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதி, பொய்யா குளம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை விரிவு படுத்துவதற்காக நிதி உதவி பெற்று தருமாறு கோரினா்.
இதையடுத்து, பாஜக பட்டியல் அணி நிா்வாகிகள் முயற்சியால், தெருவோர வியாபாரிகள் 25 பேருக்கு பாரத பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தில் தலா ரூ.10,000 கடனுதவிக்கான வங்கி அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கி அனுமதிக் கடிதத்தை பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வியாபாரிகளிடம் வழங்கினாா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளா் மோகன்குமாா், விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினா் பாரதிமோகன், அலுவலக பொறுப்பாளா் மகேஷ், பட்டியல் அணி பொருளாளா் சிவபெருமான், தொகுதி தலைவா் உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.