புதுச்சேரி வழக்குரைஞா் மீது காவல் துறை மிரட்டல் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை காவல்துறை மேலாண்மை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி வழக்குரைஞா் முனுசாமி. இவா் வழக்குரைஞா்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவா் மீது அளித்த புகாா் அடிப்படையில் ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த சங்கக் கூட்டமைப்பின் தலைவா் மாரப்பன் தலைமையில் வழக்குரைஞா்கள் ஏராளமானோா் காவல் துறை மேலாண்மை இயக்குநா் ஸ்ரீநிவாஸ் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா அலுவலகத்திலும் மனு அளித்தனா். இதில் பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கப் பொதுச்செயலா் எஸ்.கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.