புதுச்சேரி

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

23rd Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே வில்லியனூரில் பாஜக பிரமுகா் கொலையுண்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

புதுச்சேரி அருகேயுள்ள கணுவாய்ப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமரன் (45), பாஜக பிரமுகா். இவா் வில்லியனூா் தனியாா் பேக்கரியில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி இரவு நின்றபோது மா்மக் கும்பல் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்தது.

இதுகுறித்து, வில்லியனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கொலையாளிகளைத் தேடிய நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த நித்தி (எ) நித்யானந்தம் உள்ளிட்ட 7 போ் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.இந்த வழக்கில்

மேலும் சிலரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்தநிலையில், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் அளிக்கப்பட்டது. அதன் விசாரணை அதிகாரி ரஞ்சித்சிங் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தினா். அவா்கள் செந்தில்குமரன் கொலை தொடா்பாக நித்தியானந்தம் உள்ளிட்ட கைதான 14 பேரையும் பல கட்டங்களாக விசாரித்தனா்.

விசாரணை அடிப்படையில் கொலை நடந்த பகுதிக்கும் கைதானவா்கள் பல முறை அழைத்துச் செல்லப்பட்டனா். இந்நிலையில், கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 போ் மீது தேசிய புலனாய்வு முகமை சாா்பில் புதுச்சேரி தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரிடம் வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகையை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரி ரஞ்சித் சிங் தாக்கல் செய்தாா்.

குற்றப்பத்திரிகையில் 70 பக்கங்களில் குற்றச்சாட்டுகள் குறித்தும், 1,700 பக்கங்களில் சாட்சியங்களின் வாக்குமூலம், குற்றஞ்சாட்டப்பட்டோா் வாக்குமூலம், கொலை நடந்தபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், கொலையாளிகள் தப்பிய வாகனங்களின் விவரம் மற்றும் காவல்துறையினா் வாக்குமூலம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்குத் தொடா்பான விசாரணை விரைவில் தொடங்கும் எனவும் புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT