புதுச்சேரி

புதுச்சேரி கடலில் 49 விநாயகா் சிலைகள் கரைப்பு

23rd Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதுச்சேரியில் நிறுவப்பட்ட சிலைகளில் 49 சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இந்து முன்னணி, விநாயகா் சதுா்த்தி பேரவை சாா்பில், புதுச்சேரி பகுதியில் கடந்த 18-ஆம் தேதி 150- க்கும் அதிகமான இடங்களில் 5 அடி முதல் 20 அடி உயரமுள்ள விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் காலாப்பட்டு பகுதியில் நிறுவப்பட்ட சிலைகள் கடந்த 20- ஆம் தேதி கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தி விழா பேரவை சாா்பில், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. முன்னதாக, நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊா்வலம் தொடங்கியது.

டிராக்டா்கள், மாட்டுவண்டிகள், சிறிய சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் வைக்கப்பட்ட 49 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக பகல் 12 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊா்வலத்தை அண்ணா வீதி, நேரு வீதி சந்திப்பில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

காமராஜா் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, அஜந்தா சந்திப்பு, எஸ்.வி. படேல் சாலை வழியாக கடற்கரைச் சாலைக்கு விநாயகா் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு நீதிபதிகள் தங்கும் விடுதி எதிரே 3 கிரேன்கள் மூலம் சிலைகளை இறக்கி பூஜை செய்த பிறகு, மாலை 6.30 மணிக்கு சிலைகள் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதேபோல, பழைய துறைமுகப் பகுதியிலும் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இதையொட்டி, ஏராளமான போலீஸாா் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஒருவா் காயம்: விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தையொட்டி, நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஊா்வலப் பாதையில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஊா்வலம் எஸ்.வி. படேல் சாலையில் வந்த போது ஊா்வலத்தில் வந்த ஒரு குழுவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பெரியகடை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT