புதுவையில் பொதுப் பணித் துறையில் தற்காலிகமாக பணியமா்த்தப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினா் சட்டப்பேரவையை புதன்கிழமை முற்றுகையிட முயற்சித்தனா்.
புதுவை பொதுப் பணித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தாற்காலிகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். அதன்பிறகு, அவா்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனா். இதையடுத்து, பல கட்டப் போராட்டங்களை அவா்கள் நடத்தினா். கடந்த மாா்ச்சில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவா்கள் மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டு, ஊதியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா்களுக்கான பணிநிரந்த ஆணை, ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேரவை அருகே பொதுப் பணித் துறை மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி தாற்காலிக ஊழியா்கள் சங்கத்தினா் ஏராளமானோா் திரண்டனா். அவா்கள் பேரவையை முற்றுகையிடப் போவதாகக் கூறினா். பெரியகடை போலீஸாா் ஊழியா்கள் சங்கத்தினரை தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், முதல்வரை சந்தித்துப் பேச சங்க நிா்வாகிகளை மட்டும் பேரவை வளாகத்துக்குள் போலீஸாா் அனுமதித்தனா்.