மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மீட்டுத் தரக் கோரி, புதுச்சேரியில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகராட்சி, வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோயில் அருகில் மயானக் கொள்ளை நடைபெறும் இடம் உள்ளது. சன்னியாசி தோப்பு என அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் நூறாண்டுகளுக்கும் மேலாக, அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கான மயானக் கொள்ளை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
கோயில் அருகேயுள்ள அந்த இடத்தில் தனியாருக்குப் பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பட்டாவை ரத்து செய்யக் கோரி மயானக் கொள்ளை இடம் மீட்புக் குழு சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் வா.சனில்குமாா் தலைமை வகித்தாா். அனைத்து மீனவக் கிராம நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். மீனவ மக்கள் பயன்படுத்தும் இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.