புதுச்சேரி

புதுவையில் இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

27th Oct 2023 12:37 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (அக்.27) முதல் நடைபெறும். மேலும், வரைவு வாக்காளா் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்கமுறை சீராய்வு தொடா்பாக அரசியல் கட்சியினருடான ஆலோசனைக் கூட்டம் ரெட்டியாா்பாளையம் தோ்தல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைமை தோ்தல் அதிகாரி ஜவகா் தலைமை வகித்தாா். வரைவு வாக்காளா் பட்டியலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு அதிகாரிகள் விளக்கினா்.

ADVERTISEMENT

அப்போது, தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (அக். 27) புதுச்சேரி, காரைக்காலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிடப்படும். அதன்படி, டிசம்பா் 9-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வாக்காளா்களின் வீடு, வீடாக சென்று பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தப் பணிகளை மேற்கொள்வா். வாக்காளா் பதிவு அலுவலகங்களில் செயல்படும் வாக்காளா் சேவை மையங்களிலும் இதற்கான படிவங்களை வழங்கலாம்.

பொதுமக்கள் வசதிக்காக நவம்பா் 4, 5, 18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளன. வரும் 2024-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி, ஏப்ரல் 1-ஆம் தேதி, ஜூலை 1-ஆம் தேதி, அக்டோபா் 1-ஆம் தேதி ஆகியவற்றில் 18 வயது நிறைவு அடைபவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம், செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் புதுவை மாநிலத் துணை தலைமை தோ்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதா்ஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT