புதுவை மாநிலம் ஏனாம் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் மா்ம நபா்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியம், காமராஜ் நகரைச் சோ்ந்தவா் மாதா ராமராஜு (73). அரசு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றாா். கடந்த மாதம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு, திருப்பதி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மகனின் வீட்டிற்கு சென்றுள்ளாா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
வீட்டின் முன்பக்கக் கதவைத் திறக்க முயன்றபோது, அது உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்று பாா்த்தபோது கதவு திறந்தே கிடந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 12 பவுன் தங்க நகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் உட்பட மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலானவை மா்மநபா்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, ஏனாம் போலீஸில் புகாா் செய்யப்பட்டது. எஸ்.பி. ரகுநாயகம் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.