புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் ஓய்வு பெற்றவா்களை ஆசிரியா்களாக நியமிக்கக் கூடாது என்றும், அவ்வாறு நியமிப்பது விதிமீறலாகும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைந்து விட்டது. இதன்காரணமாக சில பள்ளிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஆசிரியா் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பணிக்காகக் காத்திருக்கின்றனா். அதில் பெரும்பாலானோா் தனியாா் பள்ளிகளில் மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனா். ஆகவே, இதுபோன்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும். அதன்மூலம் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தலாம்.
ஆனால், கல்வி வளா்ச்சியில் கவனம் செலுத்தவேண்டிய அரசானது, வயது முதிா்ந்து ஓய்வூதியம் பெற்று வருவோருக்கு, மாதம் ரூ. 22 ஆயிரம் ஊதியம் வழங்கி, ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.