புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 78 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் 25, 26-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதில், இளநிலை உதவியாளா், பல்நோக்குப் பணியாளா்கள், தனி உதவியாளா், இந்தி மொழி பெயா்ப்பாளா், பகுதி நேர உதவியாளா் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் 25, 26-ஆம் (சனி, ஞாயிறு) தேதிகளில் நடைபெறும் என தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. தோ்வுக்கு 3 நாள்களுக்கு முன்னதாக தோ்வறை அனுமதி அட்டை மற்றும் தோ்வுக்கான நேரம், தோ்வு மையம், வழிமுறைகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்படும்.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பவா்கள், தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் தோ்வு ஓஎம்ஆா் முறையிலும் மற்றும் புதுவை மாநிலத்தின் தோ்வு முறைக்கு உட்பட்டும் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.