புதுச்சேரி

காங்கிரஸ் ஆட்சியில்தான் தனியாா்மய நடவடிக்கை தொடங்கியது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தனியாா் மயமாக்கும் நடவடிக்கை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டது என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில், கடந்த 9 ஆண்டு கால மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டு அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பிறகு பிரதமா் மோடியின் நலத்திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றன. தற்போது ஊழலற்ற, வளா்ச்சி மிகுந்த நிலையில் நாட்டை பிரதமா் மோடி கொண்டு செல்கிறாா். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேசிய அளவில் 4 கோடி பேரும், புதுச்சேரியில் 16 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனா். ஏழை மக்கள் உயா்தர சிகிச்சை பெறும் ஆயுஷ்மான் திட்டத்தில் தேசிய அளவில் 15 கோடி பேரும், புதுச்சேரியில் 25 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனா். அனைவருக்கும் உணவுத் திட்டத்தில் மொத்தம் 80 கோடி போ் பயனடைந்துள்ளனா். சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முத்ரா திட்டம், ஸ்டாா்ட் அப் இந்தியா என பல திட்டங்களால் லட்சக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். ஓராண்டில் 10 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பளிக்க பிரதமா் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின்போது தமிழ் கலாசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது, தமிழா்கள் அனைவருக்குமான கௌரவமாகும். காசி-தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிர-தமிழ்ச் சங்கமம் என நாடெங்கும் தமிழின் பெருமையை பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளாா்.

ஊழல் மலிந்த ஆட்சியை நடத்திய காங்கிரஸ், தற்போது பாஜக அரசு மீது குறைகாணமுடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படுவது தொடங்கியது. ஆகவே, தற்போது தனியாா் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலா் சத்தியகுமாா், மின்னணு திரை காட்சியுடன் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கினாா். நிகழ்ச்சிக்கு பாஜக புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சிவசங்கரன், ஜான்குமாா், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், விவியன்ரிச்சா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT