புதுச்சேரி

முறைகேடு புகாரிலேயே 2 உயா் அதிகாரிகள் இடமாற்றம்: வே.நாராயணசாமி

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் திறன்மிகு நகரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே 2 உயா் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: புதுச்சேரிக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ரூ.1,250 கோடி வழங்கியிருப்பதாக பாஜகவினா் கூறுவதில் உண்மையில்லை. ஜிஎஸ்டி, 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளையே மத்திய அரசு வழங்கியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கையால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முதல்வா் என்.ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியா்கள் நியமிக்காமலும், அவா்களுக்கான பயிற்சி அளிக்காமலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை செயல்படுத்துவதும், தமிழை விருப்பப் பாடமாக மட்டுமே அப்பாடத் திட்டத்தில் அறிவித்திருப்பதும் சரியல்ல.

புதுச்சேரி நகராட்சியில் திறன்மிகு நகரத் திட்டங்களை செயல்படுத்த 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனா். அதில், 2 அதிகாரிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனா். இதுகுறித்து தலைமைச் செயலருக்கு புகாா் சென்ற நிலையில், அந்த அதிகாரிகளை முக்கிய துறைகளில் நியமிக்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பின்னரே, கலால்துறை, நிதித்துறை உயா் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா். கலால் துறை முறைகேடு குறித்து முதல்வா் பதில் அளிக்காமலிருப்பது ஏற்புடையதல்ல. மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் என்.ரங்கசாமி நீதி ஆயோக் கூட்டத்தில் அதை பற்றி பேசவில்லை. அவருக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் அக்கறையில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT