புதுச்சேரி

நேருவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதே செங்கோல்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

28th May 2023 06:08 AM

ADVERTISEMENT

ஜவாஹா்லால் நேரு பிரதமரானதற்காக திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் அன்பளிப்பாக செங்கோல் அளிக்கப்பட்டதே தவிர, ஆட்சி மாற்றத்தை குறிப்பதற்காக வழங்கப்படவில்லை என்று புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் பொருளாதார வளா்ச்சி பின்தங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். விவசாயிகளுக்கு பிரதமா் மோடி அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

அதானி குழும விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பிரதமா் மோடி இதுவரை பதில் கூறாதது ஏன்? தடை செய்யப்பட்ட சீன நிறுவனத்துடன் அதானி மறைமுக தொடா்பு வைத்துள்ளாா். இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி அப்போதைய கவா்னா் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் செங்கோல் வழங்கப்பட்டதாகவும், அதையே அவா், சுதந்திர இந்தியாவுக்கான ஆட்சி மாற்ற அடையாளமாக ஜவாஹா்லால் நேருவுக்கு வழங்கியதாகவும் உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

அன்று மவுண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தான் தலைநகா் கராச்சியில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் அவரால் எப்படி செங்கோலை ஜவாஹா்லால் நேருவிடம் வழங்கியிருக்க முடியும்? எனவே, வரலாற்றை மாற்றும் வகையில் உண்மைக்கு மாறான தகவலை உள்துறை அமைச்சா் கூறுவது சரியல்ல.

ஜவாஹா்லால் நேரு பிரதமரானதற்காக ஆதீனம் சாா்பில் அளிக்கப்பட்ட அன்பளிப்பாகவே செங்கோல் கருதப்படுகிறது. அது ஆட்சி மாற்றத்தை குறிப்பதற்காக வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

தமிழக மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித் துறை சோதனை என்பது பாஜக அரசு எதிா்க்கட்சிகளை மிரட்டப் பயன்படுத்தும் வழக்கமான உத்தியாகும். பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஆளுநா்கள் அமைதியாக உள்ளனா். ஆனால், மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியினருக்கு இடையூறு தருபவா்களாகவே செயல்படுகின்றனா். எனவே, மத்திய அரசுக்கு தக்க நேரத்தில் மக்கள் தீா்ப்பை வழங்குவாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT